பெரியகுளத்தில் தொடரும் ஆக்கிரமிப்புகள்

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பிரதேசத்தில் தமிழ் பூர்வீக பிரதேசங்களில் விகாரைகள் அமைத்து சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கு திட்டம் தீட்டுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

பெரியகுளம் பிரதேசத்தில் 40 வருடங்களுக்கு மேலாக பூர்விக குடிகளாக இருக்கும் தமிழ் பிரதேசத்தில் இவ்வாறு விகாரை ஒன்று அமைப்பதற்கு வேலைகள் முன்னெடுத்துச் செல்வதாகவும் சிங்கள மக்கள் இல்லாத ஒரு பிரதேசத்தில் இவ்வாறு விகாரை அமைப்பது பெரும் சர்ச்சையினை ஏற்றப்படுத்தியுள்ளதாகவும் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறு இப்பிரதேசங்களில் விகாரை அமைக்கப்பட்டால் தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறும் எனவும் தமக்கான பூர்வீக நிலத்தை விட்டு தருமாறும் பெரியகுளம் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரியகுளம் பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சில விஷமிகளால் புதையல் தோண்டபட்டதாகவும் அவ்வாறு புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் மலைத் தொடர் ஒன்று அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அடையாளமிடப்பட்டு பாதுகாப்பு படையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் அங்கு விகாரை அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் விகாரைக்கான பாதைக்காக, முன்னரே சுமார் 6 அடி அகலமுள்ள நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டு இருந்ததாகவும், அதுமட்டுமன்றி, பிக்கு ஒருவரினால் தனிநபர் ஒருவரின் காணியின் ஒரு பகுதியினை தருமாறு கட்டாயப்படுத்துவதாகவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

(திருகோணமலை நிருபர்)

பெரியகுளத்தில் தொடரும் ஆக்கிரமிப்புகள்

Social Share

Leave a Reply