தமிழ் கட்சிகளின் ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை முடிவு

தமிழ் கட்சிகள் இணைந்து தயார் செய்துவரும் பொது ஆவணம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு நாளை முடிவெடுக்குமென, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ம் திருத்தம் என அறியப்படும், இலங்கை அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரேயொரு அதிகார பரவலாக்கல் சட்டத்தை முழுமையாக அமுலாக்க உரிய அறிவுறுத்தல்களை, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதான தரப்பு என்ற முறையில், இலங்கை அரசுக்கு கொடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து; பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சார்பாக எழுதப்படவுள்ள பொது ஆவணக்கடிதம் தயாரர் செய்யப்பட்டு வருகிறது.

இந்த விடயம் தொடர்பாக, நவம்பர் 2ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “திண்ணை கலந்துரையாடல்” முதல் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு வரைபுகளின் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும், அவை தொடர்பில் முன்வைக்கப்பட்ட வாதபிரதிவாதங்கள் தொடர்பாகவும், இன்று மாலை மெய்நிகர் கலந்துரையாடல் மூலம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு கலந்தாலோசித்தது.

அதன் அடிப்படையில் நாளை அரசியல் குழுவை கூட்டி, இந்த விடயம் தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது . இன்றைய மெய்நிகர் கலந்துரையாடலில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராத கிருஷ்ணன் ஆகியோர் உள்ளிட்ட தலைமைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

Social Share

Leave a Reply