தாம் இலங்கை அரசில் ஆட்சி பொறுப்புக்கு வந்தால், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்குவோமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமது கட்சி பௌத்த இனவாத கட்சி என்ற விம்பம் பிழையானது. இடதுசாரி கட்சி என்ற அடிப்படையில் நாம் அனைவருடனும் சேர்ந்து பயணிக்க வேண்டும். அதற்கு தயாராக இருப்பதோடு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும், வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளோடும் இணைந்து பயணிக்க தயாராக இருப்பதாகவும், அவர்களுக்காக தங்களது கதவுகள் எப்போதும் திறந்திருக்குமெனவும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிங்களவர்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கபடவேண்டுமென்ற விடயத்தை தமது கட்சி முழுமையாக மறுப்பதாகவும், சிங்களவர், தமிழர், முஸ்லிம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும், அனைவருக்கும் அதிகாரம் சமமாக வழங்கப்படவேண்டுமெனவும், தமது கட்சி இனவாதத்துக்கு எதிரானது எனவும் அனுரகுமரா கூறியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயங்களை அவர் தெரிவித்துள்ளார். “யுத்த காலத்தின் போது தமிழ் மக்கள் கொல்லப்படும் போது தமது கட்சி, இடதுசாரி கட்சியாக இருந்து கொண்டு அவர்கள் மீது அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அந்த விடயத்தை செய்ய தவறிவிட்டோம்”. அது தொடர்பில் தம்மை சுயமதிப்பீடு செய்து வருவதாகவும் மேலும் அவர் தமிழர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
தாம் எப்போதும் நீதிக்கு ஆதவராக செயற்படுகிறோம் என தெரிவித்த அனுர, முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்ற வேளைகளில் கூட நியாயத்தின் பக்கமாகவே நின்றதாகவும், தொடர்ந்தும் அவ்வாறு செயற்படுவோம் என கூறியுள்ள அவர்,
பல அரசியல்வாதிகள் வாக்குகளின் பக்கமாக நிற்பதாகவும், ஆனால் தாம் எப்போதும் நியாயத்தின் பக்கமாக நிற்போம் என தெரிவித்ததோடு, இனங்களுக்கிடையில் தாம் பிரிவினைகளை ஏற்படுத்தாது, ஒற்றுமையாக அதிககாரங்களை பகிர்ந்து வழங்குவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திசாநாயக்க கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.