நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கை விமானப்படை இந்த ஆண்டு புதிய விமானங்கள் எதையும் கொள்வனவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக, அத்தியாவசிய தேவைக்குரிய விமானங்கள் மாத்திரமே தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன தெரிவித்தார்.
நேற்று (12/01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பை பேணுவதற்கு விமானங்கள் மாத்திரமே அத்தியாவசிய தேவை என்ற நிலையில், பிற அத்தியாவசிய நடவடிக்கைகள் மூலம் நாட்டில் அந்நிய செலாவணி இருப்புக்களை சேமிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அத்துடன் இலங்கை விமானப்படைக்கு ஒதுக்கப்படும் நிதி சிக்கனமாகவும் வினைத்திறனுடனும் செலவிடப்படும் என்றும், விமானப்படையினால் ஏற்கனவே பெரிய அளவிலான வெளிநாட்டு வருவாயைப் பெற்றுத்தர முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.