பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தம்

பெப்ரவரி மாத இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பகிர்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் மற்றும் இராஜதந்திரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதற்கமைய புதிய ஆண்டின் முதலாவது இராஜதந்திர மாநாடு நேற்று முன்தினம் (27/01) இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய முன்முயற்சிகள் குறித்து அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இராஜதந்திரிகளுக்கு இதன்போது விளக்கமளித்தார்.

குறித்த சந்திப்பின் போது, மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் 2021 அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

பொறுப்புக்கூறல், நீதி மறுசீரமைப்பு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளினூடாக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன், அது திருத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், உத்தேசத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இறுதி அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கூறினார்.

மேலும் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கமளித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், நீண்ட கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல், சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை இரத்துச் செய்தல், நீதிவான்கள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளை அணுகுவதற்கான விதிகளை வெளிப்படுத்துதல் மற்றும் அறிமுகப்படுத்துதல், தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை, நீண்ட கால கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற பிரிவுகளிலான திருத்தங்கள் அதில் உள்ளடங்கும் எனவும் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் மேலும் விளக்கமளித்தார்.

பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தம்

Social Share

Leave a Reply