அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்ய கோரி முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை பரிசீலனை செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரிட் மனு எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28/01) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று நிஷங்க பந்துல கருணாரத்ன, வபார் தாஹீர் மற்றும் டீ.எம். சமரகோன் ஆகியோர் தலைமையிலான, மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரரின் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழாம் மனு மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென உத்தரவிட்டது.
