கச்சதீவு தேவாலய வருடாந்த திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படுமென, தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிரதிநிதியிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
திருவிழாவில் கலந்து கொள்ளும் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில கலந்துரையாடலை நடத்தி இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களினதும் எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வதற்கு கொறோனா அச்சுறுத்தல் காரணமாக அனுமதி வழங்குவதில்லையென ஏற்பாடு குழு தீர்மானித்திருந்தது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் ஆலோசனையின்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் உரையாடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
