இலங்கையின் மனித உரிமை செயபாடுகள் தொடர்பான நடவடிக்கைகள் சில முன்னேற்றகரமாக அமைந்தாலும் இன்னமும் பல முன்னேற்றங்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளை சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிச்செல் பச்ளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் கூட்ட தொடரில் வெளியிடப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையிலேயே இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களுக்குப் பின்னர் பொறுப்புக்கூறல் இல்லாமை குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருவதாக தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் அதன் சட்ட, நிறுவன மற்றும் பாதுகாப்புத் துறைகளில் தேவையான சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கடந்தகால மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வதற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட தீங்குகளை நிவர்த்தி செய்வதற்கு போதுமானதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிவில் சமூகத்தின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இராணுவமயமாக்கல் அதிகரித்துள்ளதாகவும், மனித உரிமை மீறல்கள் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் அரசாங்கத்தின் நிர்வாகத்துறையில் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் மனித உரிமை ஆணையாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
1980 களில் இருந்து, அனைத்து இன மற்றும் மத சமூகங்களைச் சேர்ந்த 60,000 முதல் 100,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர். இன்றுவரை, காணாமல் போன ஆயிரக்கணக்கானோரின் கதி என்னவென்று தெரியவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் படும் துன்பம் மிகப் பெரியது என்றும், அதை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தக் குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இராணுவமயமாக்கல், இன-மத தேசியவாதம், தொடர்ந்து பொறுப்புக்கூறலிலிருந்து விலகிவருகின்றமை, சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு அவர்களை அச்சுறுத்தல் போன்ற சமப்வங்களுடன் தொடர்புபட்டிருத்தல் போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் அறிக்கையிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் இலங்கை அரசின் முன்னேறகரமான செயற்பாடெனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு நாடு – ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைமை பதவிக்கு பொதுபல சேனா அமைப்பின் பிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை, போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் அனுராதபுரத்தில் நினைவு கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை, 11 மாணவர்களின் கொலையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளமை, அந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர் அரச உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
