இலங்கையில் தற்சமயம் அமுல்செய்யப்பட்டு வரும் மின்தடைக்கு எதிராக நேற்று இரவு இலங்கையில் வேறுபட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. மின்தடை நேரங்களில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன.
யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரனின் அழைப்பின் பேரில் செம்மணி வீதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் அழைப்பின் அடிப்படையில் மின்தடைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள், தீப்பந்தங்கள்,மெழுகு திரி, டோர்ச் லைட் போன்றவற்றில் ஒளியெழுப்பி தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

இலங்கை அரசாங்கம் பொருளாதாரத்தை சரியான கையாளாத காரணத்தினால் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதை மக்களுக்கு எடுத்து கூறவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த போராட்டத்தை செய்ததாக இந்த போராட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும், நிதியமைச்சரும் சரியான முறையில் பொருளாதார சிக்கல்களை கையாளாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் சென்று பேசி பொருளாதார சிக்கல்களை நீக்குமாறு 1 1/2 வருடங்களுக்கு முன்னரே நாங்கள் எடுத்து கூறிய போதும் இந்த அடாவடி அரசாங்கம் எவற்றையும் செவி சாய்க்காமல் தன்னிச்சையாக செயற்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்கள் இந்த மின் தடை காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதரம் மேலும் வீழ்ச்சியடைவதாகவும், மக்கள் கஷ்டப்படுவதாகவும் மேலு அவர் தெரிவித்தார்.

கொழும்பில் ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய அமைப்பாளர் சமித் விஜயசுந்தரவின் ஏற்பாட்டில் மின்டடைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதன் போது மெழுகுதிரிகளை தாங்கியபடி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாக வீதிகளில் நடந்து சென்றனர்.

