மக்களை அடக்கும் படலம் ஆரம்பம் – ஐக்கிய மக்கள் சக்தி

ராஜபக்சர்கள் வழமை போல மக்களை அடக்கி ஒடுக்கும் படலத்தை ஆரம்பித்துள்ளனர்.அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடும் போது சுட்டுக் கொல்லும் நிகழ்வை ரம்புக்கனையில் அரங்கேற்றியதில் வழமை போல், அரசாங்கத்தின் பயங்கரவாதத்தை முன்னிலைப்படுத்தி மக்கள் மீது திணிக்கப்பட்டதை மிகுந்த இகழ்ச்சியுடன் கண்டிக்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ராஜபக்சர்களின் அரசியலில் மக்களை அடக்குவதற்கு அதிகாரத்தை பயன்படுத்துவது நாம் கடந்த காலங்களில் அனுபவித்த ஒன்றாகும். குடிநீர் கோரி போராடிய ரதுபஸ்வல மக்களுக்கும்,எரிபொருள் மானியத்தை கோரிய சிலாபம் அந்தோனி, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தைச் சேர்ந்த ரொஷேன் சானக, வெலிக்கடை சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளை சுட்டுக் கொன்ற கொடூர ஆட்சியாளர்கள் அதை மீண்டும் செயல்படுத்த முயல்வதில் காட்டுமிராண்டித்தனத்தையே காண்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தங்கள் அதிகாரத்தைத் தக்க வைக்க, எரிபொருள்,எரிவாயு வரிசைகளில் அவதிப்பட்டு நிற்கும் மக்கள் மீது அடக்குமுறையின் கையை நீட்டுவது அனைத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களையும் கடுமையாக மீறுவதான செயலாகும்.

இந்த குற்றவியல் குற்றத்திற்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்.

ஆட்சியாளர்களின் சட்ட விரோத உத்தரவுகளை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எங்கள் சட்ட விவகார பிரிவிற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனவும் மேலும் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.

இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் உயிரிழந்த நிராயுதபாணி இளைஞரின் குடும்பத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியாக எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.

இந்நேரத்தில் பொறுமையாக செயற்ப்பட்டு, இந்தக் கொடுங்கோல் ஆட்சியை அகிம்சை மற்றும் ஜனநாயக ரீதியாக துரத்தி அனுப்புவதில், அதிக அர்ப்பணிப்புடன் பணியாற்ற உறுதிபூணுவோம்.அதற்காக மேலேலும் எந்த சவாலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி முகம் கொடுக்கும் எனவும், மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மக்களை அடக்கும் படலம் ஆரம்பம் - ஐக்கிய மக்கள் சக்தி

Social Share

Leave a Reply