பாராளுமன்றத்திற்குள் நடத்தப்படும் கட்சி தாவல்கள் முழுமையான சூதாட்டம் எனவும், அந்த குப்பை மேட்டில் ஐக்கிய மக்கள் சக்தியோ, ஐக்கிய மக்கள் கூட்டணியோ விழப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர போராட்டத்தின் ‘ஐக்கிய சக்தி பாத யாத்திரை’ மூன்றாவது நாளான நேற்று (28.04) கலிகமுவவில் ஆரம்பமாகி வரக்காபொலவில் நிறைவடைந்தது. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பேரணியில் கலந்து கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று அமைச்சு பதவிகளும், பிரதமர் பதவியும் ஏல விற்பனை சூதாட்டத்திற்கு விடப்பட்டுள்ளதாகவும், இந்த நாற்காலி பரிமாற்றத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் சஜித் பிரேமதாசா கருது வெளியிட்டுள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று, 20 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை உருவாக்கிய அரசாங்கம் இன்று நாட்டை அதல பாதாளத்திற்கு தள்ளியுள்ளது எனவும் இந்நாட்டை கட்டியெழுப்பும் பலம் ஐக்கிய மக்கள் சக்திக்கே இருப்பதாகவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.