இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்க்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கத்திலிருந்து பிரிந்து சுயாதீனமாக இயங்கும் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இடைக்கால அரசாங்கத்துக்கான சாதகமான முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவினை தொடர்ந்து இடைக்கால அரசமைப்பதற்கான ஏற்பாட்டு குழு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தி இடைக்கால அரசாங்கத்துக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் யார் என்ற கேள்விகள் அதிகமாக எழுந்துள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டார் என இந்த செய்தி வெளியிடுவதற்கு சற்று முன்னரும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்கின்ற வேளையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் சில வெளியாகியுள்ளன. இதில் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தனவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இந்த வாரம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படும் என நம்பப்படுகிறது. அரச தரப்பில் இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்படுமென கூறப்படுகிறது. மறு புறத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்படும் நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை வலுவிழந்து போகுமா என்ற சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
