பிரதமர் பதவியினை தான் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நான்கு முக்கிய நிபந்தனைகளின் கீழ் அந்த பதவியினை ஏற்க தயாராக இருப்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக இன்று அவர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி குறிப்பிட்ட காலத்துக்குள் பதவி விலக வேண்டுமென்ற நிபந்தனையின் கீழ் தான் பிரதமர் பதவியினை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்குள் சகல கட்சிகளோடும் கலந்தாலோசித்து 19 ஆம் அரசியலமைப்பு மாற்றத்தை செய்ய வேண்டும், நிறைவேற்று அதிகாரத்தை சகல கட்சிகளோடும் இணைந்து நீக்குவது ஆகிய முக்கிய நிபந்தனைகளை முன் வைத்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தை தற்காலிகமாக நடாத்தி சென்று அதன் பின்னர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஒன்றை நடாத்தி மக்களின் விருப்பத்துக்குரிய அரசாங்கத்தை அமைத்தல் போன்ற விடயங்களை சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர வீழ்ச்சிக்கு நிபுணர் குழு ஒன்றினை நியமித்து அந்த குழுவின் ஆலோசனைகளின் படி பொருளாதரத்தை கட்டி எழுப்ப வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் என்ற நிபந்தனையையும் அவர் முன் வைத்துள்ளார்.
இந்த விடயங்களுக்கு தயார் என்ற நிலை உருவாகினால் நாளைய தினமே தாங்கள் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்று ரணில் விக்ரமசிங்க பதவியேற்கிறார் என்ற செய்திகள் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் சஜித் பிரேமதாச இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
