பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தனக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை அறிவித்து வருகின்றன.
அதன் படி பொதுஜன பெரமுன பெரமுனவிலிருந்து விலகிய சுயாதீன அணி தாம் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காமல் தொடர்ந்தும் சுயாதீனமாக செயற்ப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்காக சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன தாம் ஆதரவு வழங்குவதில்லை என அறிவித்துள்ள நிலையில் 10 கட்சிகளது அணியும் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளன.
இந்த குழு சார்பாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். வடக்கு தமிழ் கட்சிகள் எதிரான நிலைப்பாட்டினையே கொண்டுள்ளன. இவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கு சாத்தியமற்ற நிலை உருவாக்கலாம் என்ற கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
17 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், பிரதி சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது. அதன்போது பெரும்பான்மை தொடர்பிலான நிலைவரம் தெரியவரும் என நம்பலாம்.
“ரணிலின் காலத்திலேதான் அதிக வட்டிக்கு அதிக கடன் வாங்கப்பட்டுள்ளது. அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் காலத்திலே வந்த டொலர் எங்கே போனது, என்ன நடந்தது என்பது தெரியாது. ரணில் இன்னுமொரு பசில்” என்ற கருத்துக்களை ஊடக சந்திப்பில் விமல் வீரவன்ச முன்வைத்துள்ளார்.
