ஐக்கிய அரபு இராட்சியத்தின் ஜனாதிபதி ஷேய்க் கலீபா பின் ஸைட் அலி நஹ்யான் இன்று நீண்ட நாள் சுகயீனம் காரணமாக 73 ஆவது வயதில் காலமானார். 2014 ஆம் ஆண்டு அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் மக்கள் மத்தியில் அவர் பெரியளவில் வெளிவரவில்லை. உள்ளிருந்தே நாட்டை ஆட்சி செய்து வந்தார்.
2004 ஆம் ஆண்டு இதற்கு முன்னர் ஜனாதிபதியாகவிருந்த அவருடைய தகப்பனார் இறந்ததனை தொடர்ந்து ஷேய்க் கலீபா பின் ஸைட் அலி நஹ்யான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
ஐக்கிய அரபு இராட்சியத்தின் 7 நகரங்களின் ஆட்சியாளர்களிருந்தே ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். நாட்டின் பணக்கார நகரமான அபுதாபி நகரின் ஆட்சியாளரான நாட்டின் ஜனாதிபதியே இன்று காலமாகியுள்ளார்.
இன்று முதல் நாட்டின் அரச தனியார் நிறுவனங்கள் மூன்று தினங்களுக்கு இயங்காதெனவும், 40 தினங்களுக்கு துக்க தினமும் அனுஸ்டிக்கப்படுமெனவும் ஜனாதிபதி விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.
இறந்த ஜனாதிபதியின் ஒன்று விட்ட சகோதரரான அபுதாபியின் முடிசூடிய இளவரசரான மொஹமட் பின் ஸைட் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்பார் என நம்பப்படுகிறது. ஏழு நகரங்களினதும் ஆட்சியாளர்கள் சந்தித்து புதிய ஜனாதிபதியினை தெரிவு செய்வார்களென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
