போராட்ட காரர்கள் மீதான தாக்குதலை தடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரே தண்ணீர் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை பாவிக்க வேண்டாமென உத்தரவிட்டதாக முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன பாரளுமன்றத்தில் நேற்று(18.05) தெரிவித்துள்ளார்.
“அன்றைய தினம் அலரிமாளிகைக்கு சமூகமளித்திருந்தவர்கள் பிரதமர் மஹிந்தவுக்கு பிரியாவிடை வழங்கவே வந்திருந்தனர். 10 சதவீதமானவர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தவேண்டுமென்ற எண்ணத்தில் வருகை தந்திருந்தனர். அங்ககே வந்திருந்த எமது அரசியல் வாதிகளினாலே இவ்வாறான சம்பவத்துக்கு உந்தப்பட்டனர். அலரி மாளிகை சென்றிருந்த என்னால் பாரிய அசம்பாவிதம் நடைபெறப்போகிறது என ஊகிக்க முடிந்தது. மேல்மாகாணத்துக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பெடுத்து இந்த விடயத்தை தெரியப்படுத்தினேன். இந்த சம்பவத்தை கட்டுப்படுத்துமாறும் கூறினேன்.
அதன் பின்னர் ஜனாதிபதியுடனான கூட்டத்துக்கு சென்று கூட்டம் நடைபெறும் வேளையில், சம்பவம் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த அவர் உடனடியாக சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் தென்னக்கோனை தொடர்புகொண்டு சம்பவத்தை தடுக்குமாறு உத்தரவிட்ட போதும் ஏன் செய்யவில்லை என கோரிய போது,
பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரே தண்ணீர் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை அரச ஆதரவாளர்கள் மீது பாவிக்க வேண்டாமென பணித்ததாக கூறியதும், “நான் ஜனாதிபதி உத்தரவிட்டேன். உடனடியாக நிறுத்தவும்” என பணித்ததன் பின்னரே அரச ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடாத்தி பொலிஸார் சம்பவத்தை கட்டுப்படுத்தினர்.
ஜனாதிபதி காலிமுகதிடலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் இருக்கவில்லையென மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக் குழுவில் சாட்சியமளித்த இருவர் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரேம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களை தடுக்க வேண்டாமென தெரிவித்துள்ளனர். அது உண்மையே என ரமேஷ் பத்திரன மேலும் கூறியுள்ளார்.
