இன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் அரச எதிர்ப்பு போராட்டத்தில் களமிறங்கினர். மதியம் கொழும்பு, கறுவா தோட்டம், தாமரைத்தடாகம் முன்றலில் ஆரம்பித்த இந்த போராட்டம் கொழும்பு கோட்டை நோக்கி நகர்ந்தது. உலக வர்த்தக மையப்பகுதியினூடாக காலி முகத்திடல் வரை பேரணியாக பல்கலை மாணவர்கள் சென்றனர்.
உலக வர்த்தக நிலையத்துக்கு உள் நுழையும் பகுதி பொலிஸாரால் மூடப்பட்டிருந்தது. அந்த தடையை மாணவர்கள் தகர்த்த நிலையில் அவர்கள் மீது தண்ணீர் தாக்குதல் மற்றும், கண்ணீர் புகை குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் காலி முகத்திடலிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தண்ணீர் தாக்குதல் மற்றும், கண்ணீர் புகை குண்டு தாக்குதலையும் மீண்டும் நடாத்தினர். போராட்டத்தை கலைக்கும் முகமாக இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்காக தாம் போராட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. “ஜனாதிபதி, பிரதமர் நாங்கள் சொல்வதனை கேட்கவில்லை. பெற்றோல் இல்லை, எரிவாயு இல்லை. நாங்கள் எங்கள் பிரச்சினைகளை பார்க்கிறோம். நீங்கள் உங்கள் அவசர கால சட்டத்தை பார்த்துக் கொள்ளுங்கள்” என மாணவர்கள் போராட்டத்துக்கு முன்னதாக பொலிஸாருக்கு தெரிவித்தனர்.