அமெரிக்கா, தென் டெக்ஷாஸ் மாநிலத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் நேற்று(24.05 – இலங்கை நேரப்படி இன்று) நடாத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 18 மாணவர்களும், ஒரு பெரியவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
18 வயதான இளைஞனே இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும், பொலிஸார் மீதும் அவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், இருவர் காயமடைந்துள்ளனர். பொலிஸாரின் பதில் துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளார் என அந்த மாநிலத்தின் ஆளுநர் கிரெக் அப்போட் தெரிவித்துள்ளார்.
7 வயது தொடக்கம் 10 வயதான மாணவர்களே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் தனது 66 வயதான பாட்டியினையும், 10 வயதான சிறுமியினையும் சுட்டு விட்டே இந்த சம்பவத்துக்கு சென்றுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ள போதும் அது உறுதி செய்யப்படவில்லையென ஆளுநர் தெரிவித்துள்ளார். 66 வயது மற்றும், 10 வயதான நபர்கள் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 28 ஆம் திகதி வரை துக்க தினத்தை அனுஸ்டிக்குமாறும், அரை கம்பத்தில் கொடிகளை பறக்கவிடுமாறும் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
10 நாட்களுக்கு முன்னர் வியாபார நிலையம் ஒன்றுக்குள் புகுந்த இளைஞன் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருந்தனர். தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கி பிரயோகங்கள் அமெரிக்க மக்கள் மத்தியில் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. துப்பாக்கி பாவனை தொடர்பிலான சட்ட இறுக்கத்தை கொண்டுவருவதற்கு அமெரிக்க சட்ட வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் 2012 டிசம்பரில் இது போன்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 20 மாணவர்கள் அடங்கலாக 26 பேர் கொல்லப்பட்டனர். 2018 இல் பாடசாலை ஒன்றின் பழைய மாணவன் நடாத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 17 மாணவர்கள் கொலை செய்யப்பட்டனர். 2020 இலும் ஒரு சம்பவத்தில் மாணவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
