க்ரிஷ் லங்கா பிரைவேட் லிமிட்டட், இலங்கை ரக்பி சம்மேளனத்துக்கு வழங்கிய 7 கோடி ரூபாவினை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட நிதி மோசடி விசாரணை பிரிவு “க்ரிஷ் லங்கா பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் HSBC வங்கியிலுள்ள ரக்பி சம்மேளனத்தின் தலைவர் நிஹால் ஹேமசிறி இனுடைய கணக்குக்கு பணத்தினை மாற்றம் செய்துள்ளது. அந்தப் பணம் பின்னர் அவரினால் இரண்டு சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான ஆலோசனையை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரியுள்ளது. வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை நீதிபதியினால் பிற்போடப்பட்டுள்ளது.
க்ரிஷ் நிறுவனம் வழங்கிய பணம் உரிய தேவைக்காக பயன்படுத்தப்படாமல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க முறைப்பாடு செய்தமைக்கு அமைவாக இந்த விசாரணை நடாத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
