IMF, இலங்கை நிபுணர் குழு கலந்துரையாடல்கள் நிறைவு

இலங்கை நிதி மற்றும் பொருளாதார துறை சார்ந்தவர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினருக்கும் இடையிலான நீண்ட கலந்துரையாடல்கள் நிறைவுக்கு வந்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் பீட்டர் ப்ரூர், மஸாகிரோ நொஸாகி ஆகியோர் தலமையிலான குழுவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலாலா வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த ஸ்ரீவர்தன ஆகியோரின் தலமையிலான நிபுணத்துவ குழுவினருக்கும் இடையில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இணைய வழியூடாக கடந்த 09 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம் பெற்றுள்ளன.

IMF குழு, தனியார் நிறுவனங்களது பிரதிநிதிகள், நிதி நிறுவன பிரதிநிதிகள், அபிவிருத்தி பங்காளர்கள் என பலதரப்பினரோடு கடந்த நாட்களில் சந்திப்புகளையும் கலந்துரையாடல்களையும் இணைய வழியூடாக செய்துள்ளனர்.

இந்த சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாக தமது கண்காணிப்பை ஆரம்பித்துள்ளதாகவும், இலங்கை எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெறுவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“இலங்கை கடினமான பொருளாதார நிலைமைகள் மற்றும் கடுமையான கொடுப்பனவு சமநிலை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள் மற்றும் மின் பற்றாக்குறையால் பொருளாதார நடவடிக்கைகள் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய பொருளாதார குறிகாட்டிகள் தெரிவிக்கின்றன.

அதிகரித்துவரும் உலகளாவிய உணவு மற்றும் எண்ணெய் விலைகள், கொடுப்பனவுகளில் தாக்கங்களை செலுத்தியுள்ளன. பொருட்களின் பற்றாக்குறை, எரிபொருள் விலை உயர்வு மற்றும் நாணயத் தேய்மானம் உள்ளிட்ட பல காரணங்களினால் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடி, மக்கள் மத்தியில் குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கே, பாரிய தாக்கம் செலுத்துவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையடைகிறோம்” என சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ குழு மே மாதம் 09 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பாரிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான விரிவான சீர்திருத்த திட்டங்கள் தொடர்பில் நிபுணத்துவ கலந்துரையாடல்களை நடாத்தியது.

பொருளாதார நிலைமயை மதிப்பிடுவதிலும், முன்னோக்கிச் செல்ல வேண்டிய முன்னுரிமை கொள்கைகள் தொடர்பிலும் நல்ல முன்னேற்றம் இருப்பதை அந்த குழு இனம் கண்டுள்ளது. ஏழைகளைப் பாதுகாத்தல், நிதி கொள்கை மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல், பணப்பரிமாற்ற ஆட்சி காரணிகள், நிதித்துறை வளர்ச்சியை அதிகரித்தல், நிர்வாகத்தை வலுப்படுத்தல் மற்றும் நிர்வாக கட்டமைப்பு சீர்திருத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. அந்த விடயங்களை அதிகாரிகள் தங்கள் அபிவிருத்தி திட்டங்களுக்குள் உள்வாங்குவதன் மூலம் அபிவிருத்திகளை மேலும் மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கிறோம்.

“பொதுக் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கியமான படியாக, தங்கள் கடனாளிகளுடன் கூட்டுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமித்ததை சர்வதேச நாணய நிதியத்தின் குழு வரவேற்கிறது. இலங்கையின் கடன்கள் மீள் செலுத்த முடியாதவை என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கான உதவி திட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் அங்கீகரிக்கப்படவேண்டுமாக இருந்தால், கடன்களை மீள செலுத்தும் இஸ்திர தன்மை உருவாகியுள்ளதனை இலங்கை உறுதி செய்ய வேண்டும்” என சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMF, இலங்கை நிபுணர் குழு கலந்துரையாடல்கள் நிறைவு

Social Share

Leave a Reply