டிரில்லியன் கணக்கான ரூபா அச்சடிப்பது பணம் படைத்தோருக்கு சலுகை வழங்குவதற்கா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் ஒன்றினைந்த முன்னணியின் பிரதிநிதிகள் குழுவினருடன் நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டிரில்லியன் கணக்கான ரூபா நோட்டுக்கள் அச்சடிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவிப்பதாகவும் ,இவ்வாறு நோட்டு அச்சடிப்பது பணம் படைத்த தனவந்தர்களுக்கு வரி சலுகை வழங்குவதற்கா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியுள்ளார்.
மக்கள் வங்கிக்கும், இலங்கை வங்கிக்கும் பணம் செலுத்த வேண்டிய பணம் படைத்த தனவந்தர்கள் பலர் நாட்டில் இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் பணத்தை அச்சிடப் போகின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் மேலும் கூறியுள்ளார்.
இவ்வாறு பணம் அச்சிடப்படும் போது வாழ்க்கைச் செலவு 40% உயரும். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி,ஆதரவற்ற மக்களே. வரிசையில் நிற்கும் மக்களை அதிலிருந்து விடுவிக்க விரும்பாத ஆட்சியாளர்கள், இந்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு தேவையான குறைந்தபட்ச ஆதாரங்களைக் கூட வழங்க விரும்பாத ஆட்சியாளர்கள்,பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிவாரணம் வழங்குவதை பற்றி மாத்திரம் சிந்திப்பதாகவும் அவர் மேலும் குற்றம் சுமத்தினார்.
இன்னல்களை எதிர்கொள்ளும் அப்பாவி மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து எவரும் குரல் கொடுப்பதில்லை என்றபோதிலும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் நட்டஈட்டை பகிர்ந்தளிப்பதற்காக மாத்திரமே அனைவரும் முன்நிற்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
பத்து இலட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் சமூகம் இந்நாட்டில் உள்ளதோடு,அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளையும் சந்தித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் சமூகத்தைப் பாதுகாக்கும் சாசனம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது கவனம் செலுத்தினார்.
இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனும் கலந்து கொண்டிருந்தார்.
