இலங்கையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் 20-20 தொடர் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை இலங்கையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனாலும் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு இராட்சியத்துக்கு அல்லது பங்களாதேஷுக்கு மாற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று(30.05) இந்த விடயம் தொடர்பில் இந்தியாவில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. IPL இறுதிப் போட்டி நேற்று இந்தியா அஹமதாபாத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் ஆசிய கிரிக்கெட் சம்மேளன தலைவர் ஜெய் ஷா, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோர் இறுதிப் போட்டியினை நிறைவு செய்துகொண்டு அங்கேயே உள்ளனர்.
இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் சம்மி சில்வா மற்றும் இன்னமும் சில முக்கிய அதிகாரிகளும் அங்கு சென்றுள்ளனர். அதேவேளை பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவரும் அஹமதாபாத் சென்றுள்ளார்.
இவ்வாறான நிலையில் இன்று அங்கு சந்திப்புகள் இடம்பெறுமெனவும், இந்த விடயம் தொடர்பில் முடிவெடுக்கப்படுமெனவும் அறிய முடிகிறது.
இலங்கை கிரிக்கெட், இலங்கையில் நடாத்த முடியாதென்ற அறிவிப்பை வழங்கும் என்ற தகவல்கள் மேலும் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஆசிய கிண்ணம் நடைபெறாமல் போனால், இலங்கை கிரிக்கெட்டுக்கும், இலங்கைக்கும் பாரிய நட்டம் ஏற்படும் அதேவேளை நாடே எதிர்பார்த்துக் கொண்டுள்ள டொலர் வரவு, அந்நியச் செலாவணி வரவு என்பன இல்லாமல் போகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.