தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், பெந்திகம உள் நுழையும் பகுதியூடாக கொழும்பு நோக்கி பயணிக்க எத்தனித்த கப் ரக வாகனத்தை பொலிஸ் சார்ஜன் ஒருவர் பயணிக்க முடியாதென தடுத்துள்ளார். பாதுகாப்பற்ற முறையில் குளிர் சாதன பெட்டி ஒன்றை பயணித்த வாகனத்தில் கொண்டு செல்ல முயன்ற வீரகெட்டிய முன்னாள் நகரசபை தலைவரும், அவரது மனைவியும் பொலிஸ் சார்ஜன் தடுத்துள்ளார்.
பாதுகாப்பற்ற நிலையில் அனுமதிக்க முடியாதென அவர் கூறியுள்ளார். அந்த வேளையில் அவரை வாகனத்தில் சென்றவர்கள் கடுமையான வார்த்தை பிரயோகங்களாலும், கெட்ட வார்த்தைகளாலும் திட்டி அச்சுறுத்தியுள்ளனர். வாகனத்தில் இருந்து இறங்கி சென்று, தள்ளிவிட முயற்சி செய்தனர்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்கள் மூலமாக இன்று பரவியிருந்தது. குறித்த பொலிஸ் சாஜன் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில், கடமைக்கு இடையூறு விளைவித்தமை, அவதூறாக பேசியமை, அச்சுறுத்தியமை ஆகிய முறைப்பாடுகளை முறைப்பாடு செய்துள்ளார். அதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய கணவனையும் மனைவியையும் கைது செய்ய பொலிஸார் தேடி வருகின்றனர். இருவரும் மறைந்துள்ளதாகவும், இவ்வாறு மறைந்திருப்பதும் குற்றமாகும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை ஓட்டியவர் முன்னாள் வீரகெட்டிய நகரசபை தலைவர் ரவிந்து வெடாராச்சி எனவும், அவரது மனைவி நெத்மி ஹரீந்திகா எனவும் இனம் காணப்பட்டுள்ளனர். ரவிந்து வெடாராச்சி, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டிலிப் வெடாராச்சியின் மகன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ரவிந்து வெடாராச்சி தனது தரப்பு நியாயத்தை சமூக வலைத்தளங்கள் ஊடக பகிர்ந்துள்ளார். அத்தோடு அவர் வாகனத்திலிருந்து மேல் சட்டையினை பிடித்து பொலிஸார் இழுத்து வெளியே எடுக்கப்படுவதும், அதன் பின்னரே அவர் பொலிஸாரை கடுமையாக திட்டும் காட்சியம் நியூஸ் பெஸ்ட் அலைவரிசையூடாக வெளியிடப்பட்டுள்ளது.
