மின் பொறியியளாளர்கள் தமது பணி புறக்கணிப்பை கைவிட்டு பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர். நேற்று இரவு ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இன்று காலை வேளையில் கண்டி, கொழும்பு, அனுராதபுரம், கேகாலை, ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் மின் தடைப்பட்டுள்ளதாகவும், 2 தொடக்கம் 3 மணித்தியாலங்களில் மீள இணைப்பு வழங்கப்படும் எனவும் இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்ப உத்தியோகத்தகர்கள் மீள மின் வழங்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரசபை சட்ட மூலத்தில் திருத்தங்கள் செய்யப்படுவது தொடர்பிலும், தங்களது கோரிக்கைகளை மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர செவிமடுக்காது இறுக்கமான போக்கை கடைப்பிடிப்பதாகவும் மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்திருந்தது.
மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இன்று பணிக்கு மீள திரும்புவதாகவும், பாராளுமன்றத்தில் சட்ட அமுலாக்கம் நடைபெற்றால் உடனடியாக மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் இறங்குவோம் எனவும் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பணி பகிஷ்கரிப்புக்கு சங்கம் கூறும் காரணங்கள் கீழுள்ள செய்தியில் காணப்படுகிறது.
