இந்திய பிரதமர் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை இந்தியா நிறுவனத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தும் கொடுக்கிறார் என கூறியது முழுமையாக தவறு எனவும், தான் அவ்வாறு கூறியதனை மீள பெற்றுக் கொள்வதாகவும், அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கோருவதாகவும் இலங்கை மின்சாரசபையின் தலைவர் M.C.C பெர்டினான்ட் தெரிவித்துள்ளார்.
பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்ற குழுவின்(கோப்) முன் கடந்த வெள்ளிக்கிழமை முன்னிலையாகிய இலங்கை மின்சாரசபை தலைவர், அந்த கூட்டத்தில் மன்னார் மற்றும் பூநகரி ஆகிய இடங்களில் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான விலை மனு கோரலை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தம் காரணமாக வழங்கியதாக அவர் கூறியிருந்தார்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி, மின்சாரத்துறை அமைச்சின் செயலாளராக தான் கடமையாற்றிய வேளையில் அதானி நிறுவனத்துக்கு குறித்த திட்டத்தை வழங்குமாறு அறிவுறுத்தியதாக கோப் முன்னிலையில் பெர்டினன்ட் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் தன் மீது குற்றம் சுமத்தியமையினால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உணர்ச்சிவசப்பட்டு இந்த பிழையான கருத்துக்களை முன்வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தான் கூறிய விடயங்களில் எந்த உண்மை தன்மையும் இல்லையெனவும், தான் கூறிய கருத்துக்களை மீளப்பெறுவதாகவும் கோப் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மின்சார சபை தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் நேற்று வெளியாகிய வேளையிலே உடனடியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயம் தொடர்பிலான மறுப்பறிக்கையினை வெளியிட்டுள்ளார். தான் தனிப்பட்ட நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ அந்த மின் உற்பத்தி நிலையங்களை வழங்குமாறு எந்தவித அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மின்சாரசபை தலைவரின் கருத்து மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கும் இலங்கைக்கு உதவி வழங்கி கொண்டிருக்கும் இந்தியாவுடனான நட்புறவை முறியடிக்கும் செயலக மாறிவிடுமென கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.