தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த 12 ஆம் திகதி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
இந் நிலையில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், நேற்று (16.06) குருந்தூர்மரை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் தொடரப்பட்ட வழக்கினை நகர்த்தல் பத்திரம் அணைத்து, ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மதிக்காமல் அவமதிப்புச் செய்து, அங்கு அமைக்கப்பட்ட விகாரை தொடர்பிலும், பொலிசார் தொடர்ச்சியாக இந்த வழக்கிலே நீதிமன்றிற்கு வழங்கவேண்டிய அறிக்கைகளை வழங்காது, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து மன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
அந்தவகையில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும், பொலிசார் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆழ்ந்து அவதானித்த நீதவான், வழக்குத் தொடுனரான பொலிசார், குருந்தூர் மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் 23 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு திகதியிட்டுள்ளார்.
