இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஐந்து போட்டிகளடங்கிய தொடரில் 3-1 என இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது. தொடரின் முதற் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி அடுத்த நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மிகவும், இறுக்கமாக. விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 04 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இலங்கையில் போட்டி நடைபெற்றாலும், அவுஸ்திரேலியா அணியினை மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்கடிப்பது இலகுவானதல்ல.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இலங்கை அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றது. சரித் அசலங்க தனது முதலாவது சதத்தினை பூர்த்தி செய்து 110 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். தனஞ்ஜய டி சில்வா 60 ஓட்டங்களையும், வனிது ஹசரங்க ஆட்டமிழக்காமல் 21 ஒட்டங்களையும் பெற்றனர்.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில், மத்தியூ கூனமன், பட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களையும், ட்ரவிஸ் ஹெட் 27 ஓட்டங்களையும், மிட்செல் மார்ஸ் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் தனஞ்செய டி சில்வா இரண்டு முக்கிய விக்கெட்களை கைப்பற்றினர். ஜெப்ரி வன்டர்சாய், சாமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும், டுனித் வெல்லாலகே, மகேஷ் தீக்க்ஷன, வனிது ஹசரங்க, தஸூன் சாணக்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
