எரிபொருள் எப்போது வரும்?

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெற்றோல் வரும் தினங்களும் தற்போது நிலையற்ற தன்மையினை ஏற்படுத்தி வருகிறது. 24 ஆம் திகதி வரையும் எரிபொருள் வராதென்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. அதேபோன்று வரவில்லை.

ஐக்கிய தொழிற் சங்க பேச்சாளர் ஆனந்த பாலித்த அந்த தகவலை வெளியிட்டிருந்த அதேவேளை, இந்த வாரம் எந்த கப்பல்களும் வருகை தராதெனவும், எரிபொருளுக்கான பணம் எதுவும் செலுத்தப்படவில்லையெனவும் கூறியுள்ளார்.

இன்றைய தினம் எரிபொருள் வராத நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று எரிபொருள் வராதெனவும், எப்போது வருமென இன்று பிந்திய வேளையில் தெரிய வருமென தனக்கு அறிவித்ததாக வலுசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர கூறியுள்ளார். இந்த சம்பவத்துக்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

எரிபொருளுக்காக பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தந்த தினங்களில் எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடையுமெனவும் அமைச்சர் முதலில் கூறியிருந்தார். தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்களை மையப்படுத்தி தகவல்களை வெளியிடுகிறார். ட்விட்டர் தளத்தில் உடனுக்குடனான தகவல்களை வழங்கிய அவரது தகவல்கள் பரிமாற்றங்களும் தற்போது குறைத்துள்ளன.

நேற்று பெற்றோல் கப்பல் ஒன்றும், இன்று டீசல் கப்பல் ஒன்றும், செவ்வாய்க்கிழமை கச்சாய் எண்ணை கப்பல் ஒன்றும் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்த கப்பல்களும் வருகை தரவில்லை. கச்சாய் எண்ணை இல்லாத நிலையில் சப்புகஸ்கந்தை எண்ணை சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியகூட்டுத்தாபனத்தின் 25,000 மெற்றிக் தொன் டீசல், மற்றும் 1500 மெற்றிக் தொன் பெற்றோலுமே கையிருப்பில் உள்ளதாக ஆனந்த பாலித கூறியுள்ளார்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தம்மால் இயன்றளவு எரிபொருளை தினமும் இலங்கை பூராகவும் விநியோகம் செய்து வருகிறது.

விலையேற்றம் நேற்று நள்ளிரவு முதல் நடைபெறும், இன்று நள்ளிரவு முதல் நடைபெறும் என பேச்சுக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வந்தன. இருப்பினும் இதுவரையிலும் விலையேற்றங்கள் நடைபெறவில்லை.

பெற்றோல் நிலையங்களில் வரிசைகளில் நிற்பவர்கள் விலையேற்றங்கள் தொடர்பில் அக்கைறை கொண்டுள்ளதாக தென்படவில்லை. மாறாக எரிபொருள் கிடைத்தால் போதுமென்ற மனநிலையில் காணப்படுகிறார்கள்.

தொடரும் இவ்வாறான சிக்கல் நிலையினால் மக்கள் வரிசைகளில் நிற்கும் நிலை அதிரித்துக் கொண்டே செல்கிறது. மீண்டும் மீண்டும் வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பி தேவையானவர்களுக்கு இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளும், பெற்றுக்கொண்ட எரிபொருளை உறிஞ்சி இழுத்து சேமித்து வைத்து கறுப்பு சந்தையில் விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பல இடங்களில் இவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டாலும், கறுப்பு சந்தை மிகப் பெரியளவில் பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகின்றது.

எரிபொருள் எப்போது வரும்?

Social Share

Leave a Reply