இன்று காலையில் காலி மைதானத்தில் மழை பெய்து வருகின்றமையினால் போட்டி ஆரம்பிக்க தாமதிக்கலாம் என நம்பப்படுகிறது.
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான வோர்ன் – முரளி கிண்ண முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நேற்று ஆரம்பித்தது. இரு அணியின் துடுப்பாட்ட வீரர்களும் தடுமாறி வருகின்றனர். நேற்றைய முதல் நாளில் 13 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. இன்றைய நாளில் அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்களை வேகமாக கைப்பற்ற வேண்டும் என்ற நிலை இலங்கைக்கு காணப்படுகிறது. இல்லாவிட்டால் அவுஸ்திரேலிய அணி முன்னிலை பெற்று’வெற்றி வாய்ப்பை பெற்றுக் கொள்ளும்.
முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பாடி வரும் அவுஸ்திரேலிய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் உஸ்மான் காவாஜா ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 25 ஓட்டங்களையும், மானஸ் லபுஷேன் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ரமேஷ் மென்டிஸ் 2 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 59 ஓவர்களில் 212 ஓட்டங்களை பெற்றது. நிரோஷன் டிக்வெல்ல 58 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 39 ஓட்டங்களையும், திமுத் கருணாரட்ன 28 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 23 ஒட்டங்களையும், ரமேஷ் மென்டிஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் நேதன் லயோன் 5 விக்கெட்களையும், மிட்செல் ஸ்வப்சன் 3 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.