முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் முதலாவது அமைச்சராக அண்மையில் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முதல் அவரின் அமைச்சுக்கு கீழ் இயங்கும் வகையில் மூன்று நிறுவனங்கள் பிற அமைச்சுகளிலிருந்து மாற்றப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதி விஷேட வர்த்தமானி மூலம் இதனை அறிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட, தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனமான ரக்ஸன ஆரக்க்ஷகா லங்கா வரையறுக்கப்பட்ட நிறுவனம் புதிய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்பட்ட முதலீட்டு நிறுவனமான சேலன்டிவா வரையறுக்கப்பட்ட முதலீட்டு நிறுவனம் மற்றும் ஹில்டன் ஹோட்டல் உரிமை நிறுவனமான ஹோட்டல் டெவலப்பேர்ஸ் லங்கா வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஆகியவை முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இரண்டு தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சு பதவிக்கு பொருத்தமற்றவர் என அமைச்சர் தம்மிக்க பெரேரா விமர்சனங்களை முன் வைத்துள்ள நிலையில், ரணில் டொலர் கொண்டு வரும் திட்டங்களை தடுத்து நிறுத்தி அரசியல் விளையாட்டை விளையாடுகிறார் எனவும், டொலரை நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களோ, மக்களை பிரச்சினைகளை தீர்க்கும் திட்டங்களோ இல்லையென குற்றம் சுமத்தியிருந்த நிலையில் தம்மிக்க பெரேராவின் அமைச்சுக்கு மேலும் நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ளமை பேசு பொருளாக மாறியுள்ளது.