ஊரடங்கு சட்டம் எந்த அடிப்படையில், யாரின் அனுமதி மூலம் பிறப்பிக்கப்பட்டது என பொலிஸ் மா அதிபரிடம் அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் அமுல் செய்யப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் சட்டத்துக்கு புறம்பானது என மேலும் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மக்களின் அடிப்படை உரிமையினை மீறும் செயல் என தெரிவித்துள்ள சங்கம், உடனடியாக பொலிஸ் மா அதிபர் ஊரடங்கு சட்டத்தை வாபஸ் பெறவேண்டுமெனவும், இல்லாவிட்டால் நாடு பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல் துறைக்கு இவ்வாறனா ஊரடங்கு சட்டத்தினை அமுல் செய்யும் அதிகாரம் இல்லையெனவும், இலங்கை சட்டத்தையும், மக்களின் அடிப்படை உரிமையும் மீறும் செயற்பாடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சகல மக்களுக்கும் நாட்டின் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக போராடும் உரிமையுண்டு. யாருக்கும் மக்களை தடுக்கும் அதிகாரம் இலையெனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு அமுலாக்கம்; பேச்சு, கருத்து சுதந்திரத்தை தடுக்கும் செயற்பாடு எனவும், பொருளாதர சிக்கலினால் பாதிக்கப்பட்ட நாட்டுக்கு பாரிய பின்னடைவு ஏற்படுத்தும் எனவும், சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துமெனவும் அகில இலங்கை சட்ட தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.