போராட்டங்களில் ஈடுபடும் வேறு பின்னணிகளை கொண்ட சில குழுக்கள் தமக்கு வேண்டியவர்களை ஜனாதிபதியாக்குவதற்காகவே இந்த போராட்டங்களை நடத்துவதாக பிரதமரும், பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும், 15 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படுவார். அதனை தடுத்து, தமக்கான ஜனாதிபதியினை நியமிக்க வைப்பதற்காகவே இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன.
பாராளுமன்றம், விமான படை தளபதி, இராணுவ தளபதி ஆகியோரது வீடுகளையும் முற்றுகையிட போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சபாநாயகர் பாராளுமன்றத்துக்கான பாதுகாப்பை ஏற்பாடு செய்தமையினால் அங்கு செல்லமுடியாமல் போனது.
இவ்வாறான நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு வருகை தந்து குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் இங்கே வரவேண்டிய தேவையில்லை.
புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை பாரளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படவேண்டும். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வீடுகள், சொத்துக்கள் பாதுகாக்கப்படவேண்டும். இவ்வாறான நிலையிலேயே ஊரடங்கு சட்டம் மற்றும் அவசரகால சட்டம் ஆகியன அமுல்செய்யப்பட்டுள்ளன.
பொலிஸார் மற்றும் முப்படைகளுக்கும் நிலைமைகளை சுமூகமாக கொண்டுவருவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
