காலிமுகத்திடல் போராட்டம் அழிப்பு – மிலேட்ச்சத்தனமான இராணுவ நடவடிக்கை

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்திவந்த போராட்டக்காரர்கள் நேற்று நள்ளிரவு முதல் (21.07) அகற்றப்பட்டுள்ளனர். கடும் இராணுவ மற்றும் பொலிஸ் நடவடிக்கைகள் மூலம் இவர்கள் அகற்றப்பட்டுள்ளனர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. இன்று காலை வேளையில் அந்த இடம் முழுமையாக சுத்தமாக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

இந்த சம்பவத்தின் போது பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுமுள்ளனர். இராணுவம் காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்டதாக சமூக ஊடகங்கள் மூலமாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

பல ஊடகவியலார்கள் தாக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டுமுள்ளனர். இராணுவ மற்றும் முப்படைகளை சேர்ந்தவர்கள் மிக மோசமாக ஊடகவியலார்களை கையாண்டிருந்தனர். பலர் அங்கிருந்து செய்திகளை திரட்ட முடியாதளவுக்கு அச்சுறுத்தப்பட்ட நிலையில் திரும்பி சென்றுள்ளனர்.

வெளிநாட்டு ஊடகவியலார்களும் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டும், தாக்கப்பட்டுமுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்று அன்றைய தினமே இவ்வாறனா சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

காலிமுகதிடல் S.W.R.D பண்டாரநாயக்கே சிலையிலிருந்து 50 மீட்டர் சுற்று வட்டத்துக்கு யாரும் ஒன்று கூட முடியாதென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேவேளை ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இருப்பது சட்டத்துக்கு முரணானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு முப்படைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதி விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

 

Social Share

Leave a Reply