IMF ஒப்பந்தத்துக்கு அனைத்து தரப்பு ஆதரவு அவசியம் – ரணில்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவருவதே முதலாவது பணியெனவும், அதனை சர்வதேச நாணய நிதியத்தினூடாகவே செயற்படுத்த முடியுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் மாற்று வழிகளை தேடவேண்டுமென கூறுகின்ற போதும், சர்வதேச நாணய நிதியத்தினூடாக தீர்வு காணுவதனை விட வேறு வழி கிடையாதென நேற்று(05.08) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி ரணில் கருத்து வெளியிட்டுள்ளார்.

2008 – 2009 ஆம் ஆண்டு ஆசியாவில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நிலையை சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டுடன் சமாளிக்க முடிந்த்து. தற்போதைய நிலையில் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினை பெற்றே ஆகவேண்டுமென ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் முதலில் அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டும். இதனை சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் கருத்திற் கொள்ள வேண்டும். இதனை ஒருவர் மறுத்தாலும் அல்லது ஆதரவு வழங்க மறுத்தலும் அதனை சர்வதேச நாணய நிதியம் கருத்தில் எடுக்கும் அதேவேளை, அவர்கள் அது தொடர்பிலும் கேள்வியெழுப்புவார்கள்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் போது அனைத்து தரப்பினரும் அதற்கு கட்டுப்பட வேண்டும். நாம் எதிர்கொண்டுள்ள மிக பெரிய பிரச்சினை அரசாங்க, அரச கொள்கை மாற்றங்கள். ஆகவே இந்த விடயங்களிலும் பார்க்க நாம் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளோமா என்பதே முக்கிய கேள்வி எனவும் அவர் மேலும் தனது உரையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

சகல கட்சிகளும், இந்த ஒப்பந்தத்துக்கு முழுமையாக ஆதரவு வழங்க வேண்டும். பகுதியளவில் ஆதரவு, சில விடயங்களுக்கு மட்டுமே ஆதரவு என்றெல்லாம் கூறமுடியாது. கட்சிகள் ஆதரவு வழங்காவிட்டால் பாராளுமன்றமே சகல விடயங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என கூறிய ரணில் விக்ரமசிங்க, கசப்பாக இருந்தாலும் குணமடைய மருந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஊசியினை போட்டுக் கொள்ள வேண்டுமென கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி திட்டத்தில் அதிகாரிகள் மட்ட ஒப்பந்தம் கைவசம் தயாராகவுள்ளது. இரண்டாவது முக்கியமான விடயம் நிலையான கடன் மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பதே. வெளிநாட்டு கடன்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். அவற்றை பார்க்கும் போது பூலோக அரசியலில் சிக்கும் நிலையும் இலங்கை ஏற்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

IMF ஒப்பந்தத்துக்கு அனைத்து தரப்பு ஆதரவு அவசியம் - ரணில்

Social Share

Leave a Reply