ஒளிபரப்பு நிறுவன மறுப்பே ஆசிய கிண்ணம் டுபாய் சென்றது?

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு இராட்சியத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இலங்கையின் சமகால பிரச்சினைகள் காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்திருந்தது.

இந்த மாற்றத்தினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு பாரிய நட்டம் எதுவும் ஏற்படவில்லை என இலங்கை கிரிக்கட் செயலாளர் மொஹான் டி சில்வா மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோரினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் இலங்கையிலிருந்து இரத்தாகியமையினால் இலங்கைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் சுற்றுலா பயணிகள், முக்கிய நபர்களது வருகை இல்லாமல் போனவை மற்றும் அவற்றின் மூலம் கிடைத்திருக்க கூடிய பணம் இழக்கப்பட்டுள்ளதாகவும், இருந்தாலும் இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் வருமானம் மூலம் நாட்டுக்கு பணம் டொலர் மூலமாக வருமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேர்மிங்காமில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்ட தொடரிலேயே இந்த மாற்றம் தொடர்பில் முடிவெடுக்கப்பட்டதாகவும், இலங்கை தொடர்பில் வெளியாகியுள்ள மறைத்தன்மையான கருத்துக்களும், ஒளிபரப்பு நிறுவனம் ஏற்பாடுகள் தொடர்பில் மறுப்பு வெளியிடடமை மற்றும் காப்புறுதி நிறுவன மறுப்புகள் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

இந்தியா கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இலங்கையில் இந்த தொடரை நடாத்த கடும் பிரயத்தனம் எடுத்ததாகவும் தெரிவித்த மொஹான் டி சில்வா, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோரும் கடுமையாக முயற்சித்ததாகவும் கூறினார்.

போட்டி தொடர் இடை நடுவே நிறுத்தப்பட்டால் அடுத்த சில வருடங்களுக்கு ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தை நடாத்தி செல்வதிலேயே சிக்கல் நிலை ஏற்படும். தொடருக்கு சிக்கல் ஏதும் ஏற்பட்டால் அது மேலும் நெருக்கடியான நிலையினை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலேயே தொடர் ஐக்கிய அரபு இராட்சியத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தொடர் ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறுகின்ற போதும் இலங்கைக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைக்குமென பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கான தங்குமிட வசதிகளை செய்து கொடுப்பதற்கான செலவினங்களே முக்கியமான பாரிய செலவினம் எனவும் தெரிவித்த ஆஷ்லி டி சில்வா, இந்த தொடரை இலங்கையின் ஏற்பாட்டில் ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடாத்துவதாகவும், டிக்கெட் விற்பனை மூலமாக கிடைக்கும் வருமானத்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை கிரிக்கெட்டுக்கு வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஒளிபரப்பு நிறுவன மறுப்பே ஆசிய கிண்ணம் டுபாய் சென்றது?

Social Share

Leave a Reply