இலங்கை கிரிக்கெட் அழைப்பு தொடர் இறுதிப் போட்டியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சிவப்பு அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டம் சூட்டிக் கொண்டது. இலங்கை கிரிக்கெட் சிவப்பு மற்றும் நீல அணிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மோதியிருந்தன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிவப்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய நீல அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் லஹிரு உதார 37 ஓட்டங்களையும், அஷேன் பண்டார ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மகேஷ் தீக்ஷண, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், டுனித் வெல்லாலகே, லஹிரு மதுசங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய சிவப்பு அணி 16.5 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்று 07 விக்கெட்களினால் வெற்றி பெற்றுக் கொண்டது. இதில் குஷல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும், லசித் க்ரூஸ்புள்ளே 25 ஓட்டங்களையும், வனிந்து ஹஸரங்க ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பிரவீன் ஜெயவிக்ரம 2 விக்கெட்களையும், சுமிந்த லக்ஷன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
தொடரில் வெற்றி பெற்ற அணிக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசும், இரண்டாமிட அணிக்கு 750,000 ரூபா பரிசும் வழங்கப்பட்டன. தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கு 150,000 ரூபா, தொடரின் சிறந்த பந்து வீச்சாளருக்கு 150,000 ரூபா, இறுதிப் போட்டியின் நாயகனுக்கு 75,000 ரூபா பணப்பரிசு ஆகியவற்றுடன் தொடர் நாயகனுக்கு 250,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டன.