-அகல்யா டேவிட்-
மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் கூறியிருப்பது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் மதி குமாரதுரை தெரிவித்துள்ளார். அவர் இவ்விடையம் தொடர்பில் செப்டெம்பர் 25, வெளிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் பொன்னுத்துரை உதயரூபனவர்கள் தனது தொழிற்சங்க செயற்பாடுகள் காரணமாக முகநூல் வாயிலாக தனக்கு பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறித்த ஒரு நபரால் கொலை அச்சுறுத்தல் கூட முகநூல் பதிவுகள் வாயிலாக விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுவெளியில் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆகவே இதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடக செயலாளர் என்ற அடிப்படையில் எனக்கிருக்கின்றது.
அச்சுறுத்தல்கள் இருப்பினும் ஒரு தொழிற்சங்கம் தனது செயற்பாடுகளை சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். அவ்வாறான தொழிற்சங்க செயற்பாடுகளானது அரசியல் கலக்கப்படாது நேர்மையாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய அவா.
அத்துடன் உங்களது தனிப்பட்ட மற்றும் சமூகம் சார்ந்த முகநூல் பதிவுகள் மற்றும் வாதங்களை அரசியலாக சித்தரித்து அரசியல் கட்சிகளுக்கிடையேயும், மக்களுக்கிடையேயும் பிளவினையும் அரசியல் ரீதியான காழ்புணர்ச்சியினையையும் உண்டுபண்ணாது, நீங்கள் கூறுவதைப் போன்று இலங்கைச் சட்ட நியமங்களுக்கமைய குறித்த நபர்கள் உண்மையில் உங்கள் தொழிற்சங்க செயற்பாடுகள் மீது அச்சுறுத்தல் விடுத்திருந்தால், அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முழுச் சுதந்திரமும் உங்களுக்குள்ளது.
ஆகவே இனிவரும் காலங்களில் இவ்வாறான அரசியல் சாயம் கலக்காதவண்ணம் நாகரிகமான முறையில் உங்களது தொழிற்சங்க செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்
