நாடு மோசமான நிலைக்கு செல்கிறது என கூற கேலியாக சிரித்தார்கள்.

அன்று கோட்டாபயவின் அலையில் முழு நாடும் அகப்பட்டுக் கொண்டதாகவும் இன்று முழு நாடும் அந்த அலையில் அனாதையாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கறுத்தது வெளியிட்டுள்ளார்.

நாடே நிராகரித்த ஜனாதிபதியின் அருகாமையில் சென்று தான் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அது தொடர்பில் இன்றும் மகிழ்ச்சியடைவதாகவும் மேலும் தெரிவித்தார்.

இன்று நிலக்கரியில் கூட மோசடிகள் இடம்பெறுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்துக்கு தற்போதைய தேவை அரசியல் விளையாட்டுக்களை அமுல்படுத்துவது மாத்திரமே என்றும் கூறினார்.

இன்று நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இரண்டு மாதங்களில் தீர்வு காண முடியாது என்றும் உண்மையைப் புரிந்து கொள்ள அனைவரும் தயாராக வேண்டும் என்றும் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இனியும் மக்களை விசித்திரக் கதைகளால் ஏமாற்ற முடியாது எனவும் தெரிவித்தார்.

இந்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தாம் புரிந்துகொண்டு புதிய ஆணைக்காக உடனடியாக தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்று கூறிய போது, கேலிச்சிரிப்பு சிரித்த சிலர் தற்போது தேர்தல் வேண்டுமென்று வீதிகளில் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டிற்கு ஏற்படப்போகும் அனைத்து ஆபத்துக்கள் குறித்து தான் முன்கூட்டியே அறிவித்ததாகவும், அதற்கு அரசாங்கம் கிண்டலடித்து பதிலளித்ததாகவும், அதன் பாரதூரமான விளைவினால் இன்று முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை தொகுதிக் கூட்டம் நேற்று (28.08) நடைபெற்ற வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து தெரிவித்தார்.

Social Share

Leave a Reply