இந்தியா இனி இலங்கைக்கான கடன்கள் எதனையும் புதிதாக வழங்கும் திட்டத்தில் இல்லையென இரு இந்திய தரப்பு தகவல்களை ஆதாரம் காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் நாடு ஸ்திரத்தன்மையடைந்து வருவதாகவும், அதன் காரணமாக 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலாக உதவிகள் வழங்கும் யோசனையில் இல்லை என்றுமே குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில். அயல் நாடான இந்தியாவே அதிகமான உதவிகளை வழங்கிய அதேவேளை, பெருமளவிலான கடன்கள், கடனுதவி திட்டங்கள் என வழங்கியிருந்தது.
“மே, ஜூன், ஜூலை மாதங்களில் இலங்கையில் காணப்பட்ட நெருக்கடியான நிலையிலும் பார்க்க தற்போதைய நிலை இலகுவாகியுள்ளது. நாடுகள் எப்போதும் உதவிகளை வழங்கி கொண்டிருக்க முடியாது” எனவும், “ஏற்கனவே 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இனி சர்வதேச நாணய நிதியத்திடமே சகல விடயங்களும் தங்கியுள்ளன” எனவும் பெயர் குறிப்பிடாத இந்திய உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் இந்த அறிவிப்பு தொடர்பில் ஆச்சரியப்பட தேவையில்லை எனவும், இன்னும் சில மாதங்களில் இந்தியாவிடமிருந்து பாரியளவிலான உதவிகள் வருவதற்கான சமிக்ஞை புது டெல்லியிலிருந்து கிடைத்துள்ளதாகவும் இலங்கை அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய உதவி வழங்கும் நாடுகளுடனான கூட்டத்துக்கு இந்தியாவும் அழைக்கப்படவுள்ளதாக மேலும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் கடந்த மே மாதம் கோரிய 1 பில்லியன் பணப் பரிமாற்ற திட்டம், மற்றும் 500 மில்லியன் டொலர்களுக்கான எரிபொருள் கொள்வனவு கடனுதவி திட்டம் என்பனவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிறிதொரு அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த தகவல்களை கூறியுள்ளவர்கள், ஊடங்களுக்கு தகவல் வழங்கவும் அதிகாரமில்லாமையினால் தங்கள் பெயர்களை வெளியிடவேண்டாமென கோரியதாகவும் இந்த செய்தியினை வெளியிட்ட ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.