இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நேற்று இந்தியா, திருவானந்தபுரத்தில் நடைபெற்ற 20-20 தொடரின் முதற் போட்டியில் இந்தியா அணி இலகுவான 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
இந்தியா அணியின் அபாரமான வேகப்பந்துவீச்சு இந்தியா அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. குறிப்பாக ஆரஷீப் சிங் மிக அபாரமாக பந்துவீசி பலமான தென்னாபிரிக்கா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை தகர்த்தார். மூன்று விக்கெட்களை அவர் கைப்பற்ற, தீபக் ஷகார் மற்றும் ஹர்ஷால் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள். அஷ்வின் 4 ஓவர்களில் 8 ஓட்டங்களை மட்டுமே வழங்கினார். அக்ஷர் பட்டேல் 1 விக்கெட்டினை கைப்பற்றினர்.
தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்டத்தில் இறுதி நேரத்தில் கேஷவ் மஹாராஜா நடாத்திய அதிரடியினால் தென்னாபிரிக்கா அணி 100 ஓட்டங்களை கடந்தது. 41 ஓட்டங்களை அவர் பெற்றுக்கொடுத்தார். எய்டன் மார்க்ராம் 25 ஓட்டங்களை பெற்றார். மற்றையயவர்கள் அனைவரும் ஒற்றையிலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். தென்னாபிரிக்கா அணி இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணியின் முதல் இரு விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்டன. இந்தியா அணி தடுமாறும் என எதிர்பார்க்க லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 93 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றியினை இலகுபடுத்தினர். ராகுல் 51 ஓட்டங்களையும், யாதவ் 50 ஒட்டங்களையும் பெற்றனர். கஹிஷோ ரபாடா, அன்றிச் நோக்யா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.