எட்டாவது மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பிக்கிறது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராட்சியம், தாய்லாந்து, மலேசியா ஆகிய அணிகள் இந்த தொடரில் பங்குபற்றுகின்றன.
ஒவ்வொரு நாளும் தலா இரண்டு போட்டிகள் வீதம் சகல அணிகளும் முதல் சுற்றில் தங்களுக்குள் மோதவுள்ளன. முதல் நான்கு இடங்களை பெறுமணிகள் அரை இறுதிப் போட்டிகளில் மோதி இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகவுள்ளன. இம்மாதம் 15 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இதுவரை நடைபெற்ற 7 ஆசிய கிண்ண தொடர்களில், இந்தியா அணி 6 தடவைகள் சம்பியனாக தெரிவாகியுள்ளது. இம்முறையும் பலமான அணியாக இந்தியா அணி களமிறங்குகிறது. இலங்கை அணியும் பலமான அணியாகவே காணப்படுகிறது. இறுதிப் போட்டி வரை இலங்கை அணி தெரிவாகும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
நடப்பு சம்பியனான பங்களாதேஷ் அணி இம்முறையும் கடும் சவால் வழங்கும். 2018 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற தொடரில் சம்பியனான நிலையில் இம்முறை சொந்த நாட்டில் விளையாடுவது அவர்களுக்கு மேலதிக பலமாக அமையவுள்ளது.
முதற் போட்டி பங்களாதேஷ், தாய்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள அதேவேளை, இரண்டாவது போட்டி இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.
முதற் போட்டி இலங்கை நேரப்படி காலை 8.30 இற்கும், இரண்டாவது போட்டி பகல் 1 மணிக்கும் நடைபெறவுள்ளன.