ஓட்ட மழை பொழிந்த போட்டியில் இந்தியா அணி வெற்றி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் இன்று (02.10.) குவஹட்டியில் நடைபெற்ற இரண்டாவது 20-20 போட்டியில் இந்தியா, தென்னப்பிரிக்க அனிகள் அதிரடியாக அடித்தாடி ஓட்டங்களை குவித்தன. இருப்பினும் இந்தியா அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

தென்னாபிரிக்கா அணி சார்பாக டேவிட் மில்லர் 46 பந்துகளில் சதமடித்தார். இது அவரின் இரண்டாவது சதமாகும். 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். குயின்டன் டி கொக் 69 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இருவரும் முறியடிக்கப்படாத 174 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் அர்ஷ்டிப் சிங் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

சூரியகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி இருவரின் அதிரடியான 102 ஓட்ட இணைப்பாட்ட துடுப்பாட்டத்தினால் இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கை 237 இற்கு சென்றது. ஆரம்ப இணைப்பாட்டம் 97 ஓட்டங்களை வழங்கியது.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 237 ஓட்டங்களை பெற்றது. இது இந்தியா அணியின் 4 ஆவது அதிகூடிய ஓட்டமாகும். இதில் சூரியகுமார் யாதவ் 61 ஓட்டங்களையும், லோகேஷ் ராஹுல் 57 ஓட்டங்களையும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 43 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கேஷவ் மஹராஜ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

தென்னாபிரிக்கா அணியின் முதலிரு விக்கெட்களும் 1 ஓட்டமாக காணப்பட்ட வேளையில் வீழ்த்தப்பட்டமை அவர்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

Social Share

Leave a Reply