ஆசிய கிண்ண மகளிர் தொடரில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் வெற்றி

பாகிஸ்தான் மகளிர் மற்றும் மலேஷியா மகளிர் அணிகளுக்கிடையில் இன்று (02.10) பங்காளதேஷில் நடைபெற்ற முதற்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய மலேஷியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களை பெற்றது. இதில் எல்சா ஹண்டர் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஓமைமா சொஹைல் 3 விக்கெட்களையும், டுபா ஹசான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 9 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 61 ஓட்டங்களை பெற்றது. இதில் சிட்ரா அமீட் 31 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மஹிரா இசட்டி இஸ்மைல் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அணி 9 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாயகியாக டுபா ஹசான் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை மகளிர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிறைவு பெற்றதுடன் மழை பெய்த காரணத்தினால் 9 ஓவர்கள் குறைக்கப்பட்டு 11 ஓவர்களில் வெற்றியிலக்கு 66 ஓட்டங்களாக மாற்றப்பட்டது.

நாணய சுழற்சயில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை பெற்றது. இதில் ஹர்ஷிதா சமரவிக்ரம 37 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் 15 வயதான வைஷ்ணவி மஹேஷ், மஹிக்கா கௌர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 11 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களை பெற்றது. இதில் தீர்த்தா சதிஷ் 19 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் இனோக்கா ரணவீர, கவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இலங்கை அணி டக்லஸ் லுயிஸ் மூலமாக 11 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாயகியாக ஹர்ஷிதா சமரவிக்ரம தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய அரபு அமீரகம் அணிக்காக இரண்டு இலங்கையினை சேர்ந்த வீராங்கனைகள் விளையாடும் அதேவேளை, ஒருவர் இலங்கை அணியின் முன்னாள் வீராங்கனையாவர்.

நாளை (03.10.2022) காலை 08:30 இற்கு பங்களாதேஷ் மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கிடையில் முதற் போட்டியாக சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. மதியம் 01:00 மணிக்கு இந்தியா மகளிர் மற்றும் மலேஷியா அணிகளுக்கிடையில் இரண்டாவது போட்டியாக நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply