ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காம் நாள் போட்டிகள் இன்று நிறைவடைந்துள்ளன. அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்புகளை தக்க வைத்துள்ளன.
நான்கு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் நடைபெறவுள்ள போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக் கொள்ளும் அணிகள் அடுத்த சுற்றான இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி செல்லும்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும், சிம்பாவே அணி மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறுமணியும் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகவுள்ளன. மழை காரணமாக போட்டிகள் கைவிடப்பட்டால் சிம்பாவே மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும்.
அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் இன்று (19.10) 20-20 உலகக்கிண்ண நான்காம் நாளின் முதற் போட்டியாக ஹோபர்ட்டில் நடைபெற்றது. ஸ்கொட்லாந்து அணி ஆரமபத்திலேயே முதல் விக்கெட்டை இழந்ததனால் தடுமாறும் நிலைக்குச்சென்றது. ஸ்கொட்லாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மிச்செல் ஜோன்ஸ் அதிரடியாக துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்துக் கொடுத்த போதும் அயர்லாந்து அணியின் வீரர் கர்டிஸ் கம்பர் அதிரடியாக துடுப்பாடி அயர்லாந்து அணியை வெற்றி பெற வைத்தார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றது. இதில் மிச்செல் ஜோன்ஸ் 86(55) ஓட்டங்களையும், ரிச்சி பெரிங்டொன் 37(27) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கர்டிஸ் கம்பர் 2 விக்கெட்களையும், ஜோஷ் லிட்டில், மார்க் அடைர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களை பெற்றது. இதில் கர்டிஸ் கம்பர் ஆட்டமிழக்காமல் 72(32) ஓட்டங்களையும், ஜோர்ஜ் டொக்ரெல் ஆட்டமிழக்காமல் 39(27) ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் 119 ஓட்டங்களை ஓட்ட இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். பந்துவீச்சில் மிச்செல் லீஸ்க், சப்யான் ஷரிப், பிரட் வீல், மார்க் வட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
ஐயர்லாந்து அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாயகனாக கர்டிஸ் கம்பர் தெரிவு செய்யப்பட்டார்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் ஹோபர்ட்டிலேயே இரண்டாவது போட்டியாக நடைபெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைந்த போதும் மத்திய வரிசை வீரர்கள் தடுமாற பெரிய ஓட்ட எண்ணிக்கை ஒன்றினை பெற முடியாமல் போனது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜோன்சன் சார்ல்ஸ் 45(36) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சிகந்தர் ரசா 3 விக்கெட்களையும், ப்ளெஸ்ஸிங் முஷரபானி 2 விக்கெட்டைகளையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாவே அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை பெற்றது. இதில் லுகே ஜொங்வ் 29(22) ஓட்டங்களையும், வெஸ்லி மாதவேர் 27(19) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்களையும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்களையும், அகீல் ஹொசைன், ஒபேட் மக்கோய், ஓடீன் ஸ்மித் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
மேற்கிந்திய தீவுகள் அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாயகனாக அல்சாரி ஜோசப் தெரிவானார்.
நாளைய தினம் முதற் போட்டி இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஐக்கிய அரபு இராட்சிய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.