ICC T20 உலக கிண்ண தொடரின் இன்றைய நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி இரண்டாம் சுற்றுக்கு தெரிவானது. வெற்றி வித்தியாசம் சிறிதாக உள்ளமையினால் முதலாமிடத்தை பெற முடியவில்லை. இருப்பினும் அடுத்து நடைபெறவுள்ள போட்டியில் நமிபியா அணி தோல்வியடைந்தால் இலங்கை அணிக்கு முதலாமிட வாய்ப்பு கிடைக்கும். அதேவேளை நமிபியா அணி தோல்வியடைந்தால் மட்டுமே நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும்.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி குஷல் மென்டிஸின் சிறந்த துடுப்பாட்டம் மூலம் 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. மென்டிஸ் 79 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். சரித் அசலங்க மீள் வருகையினை ஏற்படுத்தி விட்டார். 31 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பானுக்க ராஜபக்ஷ 19 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ஆனாலும் இன்றும் பின் மத்திய வரிசை சரியாக துடுப்பாடவில்லை.
நெதர்லாந்து அணி சார்பாக போல் வன் மீக்ரான் மற்றும் பஸ் டி லீட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களையு இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. மாக்ஸ் ஓ டௌட் 71 ஓட்டங்களையும், ஸ்கொட எட்வொர்ட்ஸ் 21 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி நேரத்தில் மாக்ஸ் ஓ டௌட் அதிரடியாக துடுப்பாடி இலங்கை அணியினை நெருக்கடிக்கு உள்ளாக்கினார். அத்தோடு வெற்றி வித்தியாசத்தையும் குறைத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும், மஹீஸ் தீக்ஷண 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். இந்த போட்டிக்காக மீள அழைக்கப்பட்ட லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றாலும் கூட இலங்கை அணி அடுத்த சுற்றில் நல்ல பெறுதியினை வழங்க வேண்டுமெனில் இன்றைய போட்டி விளையாடினால் போதாது. பந்துவீச்சில் போராடிய விதம் போதாது எனும் நிலையில் காணப்பட்டது. அணியினை மேலும் சீர்செய்து போராட வேண்டும். அப்பொழுது மட்டுமே இரண்டாம் கட்ட போட்டிகளில் போராட முடியும்.