ரொனால்டோ இன்றி களமிறங்கி கோல் மழை பொழிந்த போர்த்துக்கல்

உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரின், போர்த்துக்கல், சுவிற்சலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் கோல் மழை பொழிந்து 6-1 என வெற்றி பெற்று போர்த்துக்கல் அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதற் தடவையாக போர்த்துக்கல் அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மூன்றாவது தடவையாக போர்த்துக்கல் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

போர்த்துக்கல் அணி அதன் முன்னணி வீரரும், தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றியே களமிறங்கியது. ரொனால்டோ 74 ஆவது நிமிடத்திலேயே களமிறங்கினார். அதற்குள்ளேயே தேவைக்கும் அதிகமாக கோல்களை போர்த்துக்கல் அணி பெற்றுவிட்டது.

போர்த்துக்கல் அணி சார்பாக ரமோஸ் 17 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். அதன் பின்னர் 51, 67 ஆவது நிமிடங்களில் கோல்களை அடித்து ஹட்ரிக் கோல் சாதனை படைத்தார். இந்த உலக கிண்ணத்தில் பெறப்பட்ட முதலாவது ஹட்ரிக் ஆகும். 33 ஆவது நிமிடத்தில் பெப்பே, 55 ஆவது நிமிடத்தில் குவேரியோ, 92 ஆவது நிமிடத்தில் குவேரியோ என அரை டசின் கோல்கள் அடிக்கப்பட்டன.

மனுவல் அகாஞ்சி 58 ஆவது நிமிடத்தில் சுவிற்சலாந்து அணிக்கு முதல் கோலை பெற்றுக் கொடுத்தார்.

போர்த்துக்கல் அணி பனால்டியில் வெற்றி பெற்று முதற் தடவையாக காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மொரோக்கோ அணியினை காலிறுதியில் சந்திக்கவுள்ளது.

Social Share

Leave a Reply