மாலைதீவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி!

மாலைத்தீவுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 197 தோட்டத் தொழிலாளர்களிடம் 84 இலட்சம் ரூபா வரையில் பண மோசடி செய்த நபரைக் கண்டுபிடிக்க நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாலைத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா விடுதிகளில் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், அதன்படி மாதச் சம்பளமாக ரூ. 183000/- தருவதாகக் கூறி 197 பேரிடம் தலா 30,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டதாக தோட்டத் தொழிலாளர்கள் நாவலப்பிட்டி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 12ம் திகதி மீண்டும் தோட்டத்துக்கு வந்த தரகர், நவம்பர் 15ஆம் தேதி மாலைத்தீவு செல்லப் போவதாகவும், அதற்கு முன் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி, அதற்காக தோட்டத் தொழிலாளர்களிடம் தலா 12,500 ரூபா வசூலித்துள்ளார். தொடர்ந்தும் மருத்துவ பரிசோதனைக்காக இரத்மலானை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். தொழிலாளர்கள் மருத்துவ அறிக்கை பெற்று வந்ததும் தரகர் தலைமறைவானதாக இவ்வாறு ஏமாற்றமடைந்தவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

தங்க ஆபரணங்களை அடமானம் வைத்தும் தோட்டத்தில் பணியாற்றிய பெற்றோர்கள் பெற்ற ஊழியர் சேம நலன் சார்ந்த பணத்தையும் கொடுத்து மோசடியில் சிக்கியதாகவும், நவம்பர் 15ம் திகதி , மாலத்தீவுக்கு வேலைக்குச் செல்லத் தயாராகுமாறு தரகர் தெரிவித்ததாகவும், மேலும் அவர்கள் தங்களுக்குத் தேவையான ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல அதிக பணம் செலவழித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply