போதை, ஆயுத கடத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் இலங்கை, இந்தியா நாடுகளில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தமிழக, திருச்சிராப்பள்ளி மறுவாழ்வு முகாமிலிருந்த இலங்கை தமிழர்கள் சிலரை இந்திய தேசிய புலனாய்வு துறை கைது செய்துள்ளது.
குணசேகரன், புஷ்பராஜா, மொஹமட் அஸ்மின், அழகப்பெருமக சுனில், காமினி பொன்சேகா, ஸ்டானிலி கெனடி, லதியா சந்திரசேன, தனுக்க ரொஷான், வெல்ல சுரங்க, திலீபன் ஆகிய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் போதை மற்றும் ஆயுத கடத்தல் முக்கியஸ்தரான ஹாஜி சலீம் எனும் நபரோடு கைது செய்யப்பட்ட இருவர் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து வந்ததாகவும், சலீம், டுபாய், பாகிஸ்தான், ஈரான் ஆகிய இடங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்பவர் எனவும் அவரின் உதவியோடு புலிகளின் மீள் உருவாக்க செயற்பாடுகளில் சந்தேக நபர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இந்திய தேசிய புலனாய்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஹாஜி சலீமுடன் குணசேகரன், புஷ்பராஜா ஆகிய இருவருமே தொடர்புகளை பேணி வருவதாகவும் இவர்களே இந்தியா, இலங்கையில் போதை கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதா மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 08 ஆம் திகதி இதே போன்று கைதானவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக புலனாய்வு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அத்தோடு கடந்த வருடம் மார்ச் மாதம் 21 ஆம் திகதி 300 கிலோ கிராம் ஹெரோயின், ஐந்து AK 47 துப்பாக்கிகள் அவற்றுக்கான 1000 ரவைகள் என்பனவற்றுடன் ஆறு இலக்கையர்கள் கேரளா, விழிஞ்ஞம் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டது. இந்த வழக்கோடு தொடர்புடைய இலங்கையரான சுரேஷ் ரஞ்சன் என்பவர் ஹாஜி சலீமோடு தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.