இன்று (02.01) காலை இயக்கப்படவிருந்த 11 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இலங்கை புகையிரத சேவையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் ஓய்வு பெற்றதையடுத்து இவ்வாறு புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இன்று தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
புகையிரத திணைக்களத்தின் சுமார் 500 ஊழியர்கள் கடந்த வருடம் ஓய்வு பெற்றதன் காரணமாக பல புகையிரத நிலையங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள்சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர புகையிரத திணைக்களபொது முகாமையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதால் பயணிகள் ஏதேனும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால், நிலைய அதிபர்கள் அனைவரும் சேவையில் இருந்து விலகி தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களில் மட்டும் புகையிரத ஓட்டுனர்கள் இல்லாத காரணத்தால் 95 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், நேற்று மட்டும் 48 பயணிகள் ரயில்கள், 11 சரக்கு ரயில்கள் உட்பட 59 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நேற்று 24 பயணிகள் ரயில்கள், 12 சரக்கு ரயில்கள் என மொத்தம் 36 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
போதிய எண்ணிக்கையில் புகையிரத நிலைய அதிகாரிகள் இருப்பதாகவும், ஆனால், ரயில் ஓட்டுனர்கள் இல்லாததால், பல ரயில் பயணங்கள் தடைபடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 60 வயதை எட்டிய பின்னர் ஓய்வுபெற்ற புகையிரத திணைக்களத்தின் ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த ஜனாதிபதியின் செயலாளர் அனுமதியளித்துள்ளதாகவும், ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு ஜனாதிபதியின் செயலாளர், புகையிரத பொது முகாமையாளருக்கு எழுத்துமூல அனுமதி வழங்கியுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தியவசிய ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் தக்கவைக்குமாறு ரயில்வே அதிகாரசபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்ட போதிலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இரண்டு வருடங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக, முன்னர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஊழியர்களும், ஓய்வுபெறவுள்ள ஊழியர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய உரிய அங்கீகாரம் கிடைக்கும் வரை பணிக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
