அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் ஆறு வயதுடைய மாணவன் தனது ஆசிரியரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்னர் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனிடையே அந்த மாணவர் திடீரென துப்பாக்கியை எடுத்து ஆசிரியரை சுட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 30 வயதுடைய ஆசிரியை தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தற்செயலான விபத்து அல்ல என்று விசாரணைகளை மேற்கொள்ளும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய ஆறு வயதுடைய மாணவர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சிறுபிள்ளைக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்தது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
